கொரோனாவால் உயிரிழந்த திமுக எம்எல்ஏ., ஜெ.அன்பழகன் உடல் சென்னை கண்ணம்மா பேட்டை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி 15 அடி ஆழத்திற்கு குழி தோண்டி அன்பழகன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 10 நாட்களாக அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை 8.05 மணிக்கு அன்பழகன் உயிர் பிரிந்தது. ஜெ. அன்பழகனின் மறைவு திமுகவினரை பெரும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஜெ.அன்பழகன் மறைவுக்கு அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் அதிமுக அமைச்சர்களும் அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது என அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
திமுக கட்சி நிர்வாகிகள், எம்.பிக்கள் ஆகியோர் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடலை அடக்கம் செய்ய கண்ணம்மாபேட்டை மயானத்திற்கு கொண்டுவரப்பட்டது. தந்தை அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகே ஜெ.அன்பழகன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அன்பழகன் உடலுக்கு மரியாதையை செலுத்த கண்ணம்மாபேட்டை மயானத்திற்கு வெளியே திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். இதனிடையே, சென்னை அண்ணா அறிவாலயத்தில் மறைந்த ஜெ.அன்பழகனின் உருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில் எம்எல்ஏ-வின் உடல் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.