பி. வில்சன் மத்திய அமைச்சருக்கு எழுதிய அக்கடிதத்தில், ”இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான (ஓபிசி) மருத்துவச் சேர்க்கையில் மருத்துவப் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பட்டய படிப்பு (டிப்ளமோ) ஆகியவற்றில் அகில இந்திய இடஒதுக்கீட்டு முறை நடைமுறையிலுள்ளது. இதில் மாநில அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள் வழங்கிய இடங்களைக்கூட மாணவர்களுக்கு ஒதுக்காமல் இந்திய மருத்துவக் கலந்தாய்வுக் குழு, மருத்துவக் குழு போன்றவை அந்த மாணவர்களுக்கு அநீதி இழைத்துள்ளன.
தமிழ்நாட்டில் மட்டும் கடந்தாண்டு இதர பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட (எம்பிசி) மாணவர்களுக்கு 400 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவை ஒதுக்கப்படாததால் அவர்கள் அந்த இடங்களை இழந்தனர். பட்ட மேற்படிப்புகளில் இந்தாண்டு சுமார் 425 மாணவர்கள் அவர்களின் இடங்களை இழந்துள்ளனர். அதேபோல பட்டம், பட்டய படிப்புகளுக்காக இந்தாண்டு இந்திய அளவிலான ஒதுக்கீட்டிற்கு தமிழ்நாடு அரசும் தனியார் கல்லூரிகளும் வழங்கிய 795 இடங்களில், 395 மாணவர்கள் தங்கள் ஒதுக்கீடு கிடைக்கப்பெறாமல் புறந்தள்ளப்பட்டனர்.
இது தொடர்பாக 2019 ஜூலை 26ஆம் தேதியன்று மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் பொழுது மருத்துவப் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பட்டய படிப்புகளில் மாநில அரசால் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படும் இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்க வேண்டுமென்று கோரிக்கைவைத்தேன்.
ஆனால், அந்தக் கோரிக்கை இன்றுவரை அமைச்சரவையின் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஏற்கனவே தமிழ்நாட்டில் நீட் தேர்வினாலும், இட ஒதுக்கீடு குளறுபடிகளாலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை தங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.
எனவே தயவுசெய்து இந்த விசயத்தில் அதீத கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே தமிழ்நாட்டில் பிறபடுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்டோருக்கான சட்டம் 1993இன்படி வழங்கப்படும் 50 விழுக்காடு ஒதுக்கீட்டை, மாநில அரசால் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படும் இடங்களை, இதர பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கி உறுதி செய்யவும் வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இக்கடிதத்திற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், தங்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று கூறியுள்ளார்.