சார்பட்டா படம் குறித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்து இயக்குனர்கள், கலைத்துறையினரை இழிவுபடுத்தும் செயல் என்று திமுக எம்.பி கனிமொழி கூறியுள்ளார்..
பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியானது.. இப்படத்தில் துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், சபீர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவான இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. அதே நேரத்தில் இந்த படத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது திமுக பிரச்சாரப்படம் என்று கூறினார்..
இந்த நிலையில் திமுக எம்.பி கனிமொழி கூறியதாவது, சார்பட்டா படம் குறித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்து இயக்குனர்கள்,கலைத்துறையினரை இழிவுபடுத்தும் செயல், இளம் இயக்குனர்கள் நல்ல கருத்துக்களை திரைப்படங்களில் தெரிவித்து வருகின்றனர் என்று கூறினார்..
முன்னதாக உண்மைக்குப் புறம்பான செய்திகளை மக்களிடம் பரப்புவதாகக் கூறி சார்பட்டா இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் அமேசான் நிறுவனத்திற்கு அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். குறிப்பிட்ட வசனத்தை நீக்கி படத்தை மறு வெளியீடு செய்யாவிட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது..