திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது, இதனை உடனே சரி செய்ய வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
சட்டம் ஒழுங்கை சந்தித்து சிரிக்க வைத்த திமுக அரசுக்கு கண்டனம் என ஓபிஎஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். குறிப்பாக திமுக ஆட்சியை பொறுப்பேற்று வந்தாலே சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விடும் என தமிழ்நாட்டு மக்களின் பொதுவான கருத்தாகவும், கடந்த கால திமுக ஆட்சி காலத்தின் போது இது மாதிரியான தொடர் சம்பவங்கள் அரங்கேரி இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம் என்று ஓபிஎஸ் அவர்கள் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டுகிறார்.
கடந்த இரண்டு, மூன்று நாட்களாக பாரதிய ஜனதா கட்சி அலுவலகங்கள், ஆர் எஸ் எஸ் அலுவலகங்கள் மற்றும் அதன் நிர்வாகிகள் வீடுகளின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்று வருகிறது. முதலில் கோயம்புத்தூர் அதனை தொடர்ந்து ஈரோடு, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல் செங்கல்பட்டு என பல்வேறு மாவட்டங்கள் முழுவதும் இது தொடர்கதையாக நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார். அரசின் மெத்தன போக்கே இதற்கு காரணம் என்று சுட்டிக்காட்டி உள்ள ஓபிஎஸ்,
இதுபோன்ற நடவடிக்கைகள் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அது மட்டுமின்றி அதிமுக ஆட்சி காலத்தில் அமைதி பூங்காவாக விளங்கிய தமிழகம் இன்று அமளிக்காடாக காட்சி அளிக்கிறது என்று அவர் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது என்றும், பொதுமக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது இது மிகவும் கவலை அளிக்கக்கூடிய ஒன்றாகும் என்று ஓபிஎஸ் கூறியிருக்கிறார்.
இந்த நிலை தொடர்ந்தால் சட்டம் ஒழுங்கு மட்டும் அல்லாமல் நாட்டின் பொருளாதாரம், தொழில் வளர்ச்சி சீர்கெட்டு விடும். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதற்கு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காததன் காரணம் என்று சுட்டிக்காட்டி உள்ள ஓபிஎஸ், பொதுமக்களின் அமைதி குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து அவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
இதில் தமிழக முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு, இந்த சம்பவங்களில் ஈடுபடுவோர் அடையாளம் கண்டு, அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும், இனி மேலும் இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெறாத வண்ணம், பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படாத ஆட்சி நடத்த வேண்டும் என்று திமுக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தலை வைத்திருக்கிறார்.