ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களை நிவாரணம் வழங்க விரும்புவர்கள் அனுமதி பெற தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா வைரஸ் வேகமாக பரவி விடுவதால், சமூக தொற்றாக மாறிவிடக் கூடாது என்பதை உணர்ந்த தமிழக அரசு, ஊரடங்கு காலத்தில் வறுமையில் பாதிக்கப்பட்டு, உணவின்றி திரிபவர்களுக்கு தன்னார்வலர்கள் நேரடியாக சென்று உணவு கொடுக்க தடை விதித்தது. மேலும் அவர்கள் மாநகர ஆணையரிடமும், மாவட்ட ஆட்சியரிடம் தேவையான உணவுப் பொருட்களை வழங்கலாம் என்றும், நிவாரண உதவி பணமாக இருந்தால் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்ப வேண்டும். மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசின் சார்பில் உத்தரவிடப்பட்டது.
இதனை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் யாருக்கும் நிவாரணம் வழங்க தடை விதிக்கவில்லை, அரசு சார்பில் அறிவுறுத்தவே செய்தோம் என்று அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற போத,கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்க அதிகாரிகளிடம் அனுமதி பெறத் தேவையில்லை, தகவல் தெரிவித்தால் போதும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியாக நிவாரணம் கொடுக்க விரும்புபவர்கள் 2 நாட்களுக்கு முன் அதிகாரி தகவல் தெரிவிக்கலாம். பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண உதவி வழங்க மூன்று பேர் மட்டுமே உடன் செல்ல வேண்டும் தெரிவித்து நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.