70 ஆண்டுகாலம் குடும்ப ஆட்சி மூலம் நாட்டை சீரழித்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, திமுக குடும்ப அரசியல் செய்து கொண்டிருப்பதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் காட்டமாக விமர்சித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் ‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை, தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புத்துறை, காவல்துறை அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
இதில் ‘நிவர்’ புயலை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், அதிமுக – பாஜக கூட்டணி குறித்து விமர்சிக்க ஸ்டாலினுக்கு எந்த அருகதையும் இல்லை என சாடினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், திமுக செய்த இமாலய ஊழலான 2ஜி வழக்கின் விசாரணை இறுதி கட்டத்தில் இருப்பதையும், விரைவில் தீர்ப்பு வரவிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
தினமும் அறிக்கைகள் விட்டுக்கொண்டு பிறரை விமர்சிக்கும் ஸ்டாலின், ஒருமுறை தன் மீதும், திமுக மீதும் உள்ள விமர்சனங்களையும், குற்றசாட்டுகளையும் திரும்பி பார்த்துவிட்டு அறிக்கை விடட்டும் என அமைச்சர் காட்டமாக விமர்சித்தார்.