திமுகவின் வியூகம் மாறிக்கொண்டிருப்பதை ஸ்டாலின் – ஆளுநர் சந்திப்பு காட்டுகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இந்தி தினத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போது , நாட்டுக்கு பொது மொழி அவசியம் தேவை , இந்தியாவில் அதிக மக்கள் பேசும் இந்தியால் தான் மக்களை ஒருங்கிணைக்க முடியும் என்று தெரிவித்தார். அமித்ஷாவின் இந்த கருத்து இந்தி திணிப்புக்கு முன்னோட்டமாக பார்க்கப்பட்டு தமிழகம் உட்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பாஜக ஆளும் கர்நாடக மாநில முதல்வரும் எதிர்ப்புத் தெரிவித்தார்.தமிழகத்திலும் பலரும் கண்டனம் தெரிவித்தனர். நடிகர் ரஜினிகாந்த் இந்தியை திணிக்க முடியாது, ஆனால் பொது மொழி தேவை என்று தெரிவித்தார். திமுக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டு , ஆளுநர் உறுதி மொழியை அடுத்து இந்தி எதிர்ப்பு போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், நாட்டுக்கு ஆளுநரே தேவையில்லை என கூறிவிட்டு தற்போது ஆளுநரை ஸ்டாலின் சந்திப்பது ஏன்? திமுகவின் வியூகம் மாறிக்கொண்டிருப்பதை ஸ்டாலின் – ஆளுநர் சந்திப்பு காட்டுகிறது என்றார். அதே போல நாட்டுக்கு தேவையான பொதுமொழி எது என்பதை ரஜினிகாந்த் விளக்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.