கொரோனா பரவலைத் தடுப்பதற்காக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் முக்கிய வேண்டுகோள் ஒன்றை பொதுமக்களிடம் விடுத்துள்ளார்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மாநில அரசும், சுகாதாரத் துறையும், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் பாதிப்பு குறைந்தபாடில்லை. அந்தந்த மாவட்ட ஆட்சியர்களும், மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளும் பொதுமக்களிடம் நாள்தோறும் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பல்வேறு அறிவுரைகளை கூறி வருகின்றனர். அந்தவகையில், இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வேண்டுமெனில், பொதுமக்கள் தேவையில்லாமல் தங்களது வீடுகளை விட்டு வெளியே வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
தங்களுக்கு மிகவும் அத்தியாவசிய தேவை என்றால் மட்டுமே வெளியே வரவேண்டும். அப்படி வரும் சமயத்திலும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முக கவசம் அணிந்து வெளியே வருவது உள்ளிட்ட அரசு கூறும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார். அதேபோல் பொதுமக்களில் பலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, வேறு மாவட்டத்திற்கு மாநிலத்திற்கு செல்வதற்கு அனுமதி வாங்க வருகிறார்கள். மாவட்டத்தில் எந்த வித மனுக்களையும் பெறக் கூடாது என்பதற்காகத்தான் மனுக்களுக்கான பெட்டி அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மனுக்களை எழுதி தருவதன் மூலம் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால், இ பாஸ் செயல்முறை நடைமுறைபடுத்தப்பட்டதாகவும், எனவே பாஸ் கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு யாரும் வரக்கூடாது ஆன்லைனில் தான் அப்ளை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இன்று ஒரே நாளில் மட்டும் இ பாஸ் கேட்டு வந்த பலருக்கு அறிவுரை கூறி மாவட்ட ஆட்சியர் திருப்பி அனுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.