விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை வாங்க சென்றாலோ அல்லது சிலை வைத்தாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை கண்காணிப்பு ஆணையர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி கிடையாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதேபோல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விநாயகர் சிலை வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை சார்பில் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிறு வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்களை அழைத்து விநாயகர் ஊர்வலம் தொடர்பான தமிழ்நாடு அரசின் தடை உத்தரவு குறித்து விளக்கிக் கூறப்பட்டுள்ளது.
இதில் திருவாரூர் மாவட்டத்தில் அரசு உத்தரவை மீறி, சிலை வாங்கச் செல்லுதல் அல்லது சிலை நிறுவுதல், ஊர்வலம் செல்லுதல் போன்ற நிகழ்வுகளுக்கு வாகனங்களுடன் வாடகைக்குச் செல்வதோ, வாகனங்களை அனுப்புவதோ, பயன்படுத்தவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இதனை மீறி வாகன உரிமையாளர்கள் அல்லது ஓட்டுநர்கள் வாகனத்தைப் பயன்படுத்தினால், அவர்களது வாகனங்களைப் பறிமுதல் செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை எச்சரித்துள்ளார்.