தமிழகத்தில் அடுத்து வரும் 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, மதுரை, சேலம், கரூர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம், தருமபுரி, மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியஸை ஒட்டி பதிவாகக்கூடும் என்பதால் அடுத்துவரும் மூன்று தினங்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 03.30 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை முற்பகலில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும் பிற்பகலில் தெளிவாகவும் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்ஸியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியாசாகவும் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
குமரிக்கடல், மாலத்தீவு ஒட்டியுள்ள பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45கி.மீ வரை காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே அடுத்த 24 மணி நேரத்திற்கு குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.