தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்திற்கும் அனுமதி வழங்க கூடாது என அரசுக்கு மருத்துவ குழு பரிந்துரை செய்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்படும் நிலையில் மருத்துவ நிபுணர் அறிவுறுத்தலின் படி தமிழகத்தில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று காலை ஆலோசனை நடத்திய முதல்வர் பழனிசாமி ஊரடங்கை விலக்கலாமா? அல்லது மேலும் சில தளர்வுகள் அளித்து ஊரடங்கை நீட்டிக்கலாமா? என்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை நிறைவடைந்த நிலையில் கொரோனா கட்டுக்குள் வரும் வரை சென்னைக்கு ஊரடங்கில் எந்த தளர்வுகளும் வழங்க கூடாது என மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. பிற மாவட்டங்களை விட சென்னையில் கொரோனா தொற்று அதிகமாகஉள்ளது. தமிழகத்தில் பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று சற்று குறைந்துள்ளது என அவர்கள் கூறியுள்ளனர்.
அதேபோல தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்திற்கும் அனுமதி வழங்க கூடாது என தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். கொரோனா தொற்று குறைந்தாலும் கூட பொது போக்குவரத்திற்கு அனுமதி அளிக்க கூடாது என வலியுறுத்தியுள்ளனர். வரும் வாரங்களில் கொரோனா பரவல் எப்படி உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். கொரோனா பரவல் சற்று குறையும் பட்சத்தில் பொது போக்குவரத்தை தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தி முடிவு செய்யலாம் என்று கூறியுள்ளனர். மேலும் 75% அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதை அனுமதிக்கலாம், அரசு ஊழியர்களுக்காக தனி பேருந்தை இயக்கலாம் என்றும் மருத்துவ குழு பரிந்துரைத்துள்ளது.