புதுச்சேரியில் கல்வி நிறுவனங்கள் கல்விக்கட்டணம் செலுத்தும்படி பெற்றோர்களை நிர்பந்திக்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
2020-21 ஆம் ஆண்டிற்கான கல்விக்கட்டணம், பேருந்துக் கட்டணத்தை செலுத்தும்படி கட்டாயப்படுத்தக்கூடாது என தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிகமானதை தொடர்ந்து நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், அனைத்து அரசு அலுவலங்ககள், தனியார் நிறுவனங்கள், சிறு குறு தொழில்கள், வணிக வளாகங்கள், மால்கள் என அனைத்துமே மூடப்பட்டது.
பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் மூடப்பட்டன. அரசு வங்கிகள், பால். காய்கறி, உணவு பொருட்கள் போன்ற அத்தியாவசிய விற்பனை கடைகள் மட்டும் இயங்கி வருகின்றன. ஏப்ரல் 14ம் தேதியோடு இந்த ஊரடங்கு முடிவடையும் தருவாயில், மேலும் 17 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதாக பிரதமர் மோடி செய்தி வெளியிட்டார். மேலும், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அனைத்து மாநிலங்களிலும் மாணவர்கள் தேர்வுகள் இன்றி அடுத்த வகுப்புகளுக்கு உயர்த்தப்பட்டனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டுக்கான கட்டணத்தை செலுத்தக்கோரி பல்வேறு தனியார் கல்விநிறுவனங்கள் பெற்றோர்களை வற்புறுத்தியதாக பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, கல்விக்கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோர்களுக்கு அழுத்தம் தரக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டது. தற்போது, அதே நிலை தான் புதுச்சேரியிலும் ஏற்பட்டுள்ளது.
இதனை தடுக்கும் விதத்தில், 2020-21 ஆம் ஆண்டிற்கான கல்விக்கட்டணம், பேருந்துக் கட்டணத்தை செலுத்தும்படி கட்டாயப்படுத்தக்கூடாது என புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த 10 நாட்களாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.