வீடு, வீடாக பரிசோதனை செய்து சென்னையை காக்கும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது என்று திமுக தலைவர் அறிக்கை ஒன்றை வெயிட்டுள்ளார். அதில்,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,256; சென்னையில் மட்டும் 18 ஆயிரத்து 693 பேர்.
ராயபுரம் மண்டலம் – 3224 ; தண்டையார்பேட்டை மண்டலம் – 2093 ; கோடம்பாக்கம் மண்டலம் – 2029 ; தேனாம்பேட்டை மண்டலம் – 2014 ; திருவிக நகர் மண்டலம் – 1798 ;
அரசு உணர்ந்து இருக்கிறதா ?
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் எண்ணிக்கையைவிட சென்னை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம்.
கேரளா, அசாம், ஒடிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை விட ராயபுரம் என்ற ஒற்றை மண்டல மண்டலத்தில் பாதிப்பு என்பது மிக மிக அதிகம்.
இவற்றை தமிழக அரசு உணர்ந்துள்ளதா ?
ஆயிரம் ஆயிரமாக அதிகரிக்கும் எண்ணிக்கை இலட்சத்தை தாண்டிச் செல்லும் என நினைக்க வைக்கிறதே!
பலியானவர் எண்ணிக்கை குறைவு என்னும் முதல்வர் சென்னையில் ஐந்து மண்டலங்கள் முழுமையாக கொரோனா மண்டலமாக மாறி விட்டதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ?
என்ன பதில் வைத்திருக்கிறீர்கள் ?
எண்ணிக்கையில் பாதி அளவைத்தான் அரசு சொல்லியிருக்கிறது என்று ஊடகங்கள் எழுதத் தொடங்கியுள்ளன.
சோதனைகள் உடனடியாக செய்யப்படுவது இல்லை; முடிவுகள் உடனே சொல்லப் படுவதும் இல்லை; மரணங்கள் அனைத்தும் ஐந்து நாட்கள் கழித்துதான் அறிவிக்கப்படுகின்றன. வேறு நோய்கள் சொல்லப்படுகின்றன – இப்படி பல சந்தேகங்களை மக்கள் எழுப்பி வருகின்றார்கள்.
இவை எதற்கும் முதலமைச்சரோ, அமைச்சரோ பதில் சொல்வதில்லை. தினமும் பாசிட்டிவ் எண்ணிக்கையை மட்டும் கொடுத்துவிட்டு சென்று விடுகிறார்கள்.
மருத்துவர்கள், நர்ஸ்களின் போராட்ட அறிவிப்பு:
அரசு மருத்துவர்கள், நர்சுகள் சங்க கூட்டமைப்பினர் நாளை ஒருநாள் அடையாள போராட்டத்தை அறிவித்துள்ளனர். மக்களை காப்பாற்றும் மகத்தான பணியில் இருப்போரையும் போராடும் நிலைமையில் அரசு வைத்திருப்பது வேதனை தருகிறது.
கூட்டமைப்பினரை அழைத்து அரசு உடனடியாக பேசி, கோரிக்கைகளுக்குச் செவி மடுக்க வேண்டும்.
அரசு செயல்படும் லட்சணம்:
சென்னையில் கடுமையான வாகன போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது – இதுதான் ஊரடங்கு உத்தரவும், 144 தடை அமலில் இருக்கும் லட்சணமா ?
கோயம்பேடு காய்கறி அங்காடி, மதுக்கடைகளைத் திறந்து விட்டு கொரோனா பரவுவலுக்கு காரணமாக இருந்த அரசு, இப்போது சென்னையை திறந்துவிட்டிருக்கிறதா?
இனியாவது செயல்படுங்கள்:
சென்னையில் 5 மண்டலங்களை கடுமையான அரண் அமைத்து காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. ஆனால், கட்டுப்பாடுகள் அனைத்தையும் தளர்த்தி, கொரோனா இல்லாத சென்னையாக காட்டுவதற்கு அரசும் அரசு முயற்சிக்கிறது.
சில பெரிய மாநிலங்களின் #CoronaVirus பாதிப்பைவிட, சென்னையின் பாதிப்பும்; சில மாநிலங்களைவிட இராயபுரம் மண்டலத்தின் பாதிப்பு எண்ணிக்கையும் மிக அதிகம்!
இதை #ADMKGovt உணர்ந்ததா?
வீடுவீடாகப் பரிசோதனைகளைச் செய்து கடுமையான அரண் அமைத்துச் சென்னையைக் காக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது! pic.twitter.com/wsxqw6eeYH
— M.K.Stalin (@mkstalin) June 4, 2020
கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள அனைவருக்கும் பரிசோதனைகளை வீடுவீடாக செய்ய வேண்டும். இப்பகுதிகளைச் சென்னையின் மற்ற பகுதியில் இருந்து தனிமைப்படுத்த வேண்டும். கட்டுப்பாட்டு பகுதி மக்களுக்கு தேவையான பொருட்களை அரசே வழங்க வேண்டும். அப்பகுதிக்குள் வெளியார் யாரும் நுழைய முடியாதபடி கண்காணிக்கவேண்டும். சென்னையின் ஐந்து மண்டலங்களை காப்பதில் அரசு முழுவதும் சிந்தனையுடன் பயன்படுத்த வேண்டும் என்று முக ஸ்டாலின் ஒருபக்க நீள அறிக்கை வெளியிட்டுள்ளார்.