Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

’தர்பார்’ படத்திற்கு மட்டும் செலவு செய்யாதீங்க’ – ப. சிதம்பரம்

‘தர்பார்’ போன்ற படங்களுக்குச் செலவு செய்வதுபோல் புத்தகம் வாங்குவதற்கும் செலவு செய்ய வேண்டும் என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

செளந்தரா கைலாசம் இலக்கியப்பரிசு எழுத்து மற்றும் கவிதா பதிப்பகம் இணைந்து நடத்திய நூல் வெளியீட்டு விழா சென்னை மைலாப்பூரில் உள்ள பாரதிய வித்தியபவனில் நேற்று நடைபெற்றது. இதில் கீரனூர் ஜாகீர் ராஜா எழுதிய ‘சாமானியரைப் பற்றிய குறிப்புகள்’ என்னும் நாவலும் ப. சிதம்பரத்தின் ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்ற தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலும் வெளியிடப்பட்டது.

கவிஞர் சிற்பி, கவிஞர் வைரமுத்து, அவ்வை நடராசன் உள்ளிட்டவர்கள் சிறப்பு உரை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, மக்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், தமிழ்நாடு காங்கிரஸ் ஊடக தலைவர் கோபன்னா, முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ஜாகிர் உசேன் எழுதியுள்ள சாமானியர் பற்றிய குறிப்புகள் என்னும் நாவலுக்கு, செளந்தரா கைலாசம் இலக்கியப்பரிசு சார்பாக ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. இரு நாவல்களை கவிஞர் சிற்பி வெளியிட, அதனை கவிஞர் வைரமுத்து பெற்றுக்கொண்டார்.

மேடையில் உரையாற்றிய கவிஞர் சிற்பி, ”ஒவ்வொரு நாவலிலும் ஒவ்வொரு சிக்கலை எடுத்து பேசுவது ஜாகிரின் இயல்பு. இஸ்லாமியத்திலும் ஏற்றத்தாழ்வு உள்ளது என்பது அவரின் நாவல் மூலம் எடுத்து காட்டியுள்ளார். சிதம்பரம் எழுதியுள்ள ‘அச்சமில்லை அச்சமில்லை’ நாவல் மூலம் ஒரு சாமானியன் கூட பொருளாதாரம் குறித்து தெரிந்து கொள்ள முடியும். விலை கட்டுப்பாடு, உரிமை மீது கட்டுப்பாடு, உற்பத்தி மீது கட்டுப்பாடு போன்றவற்றை எழுதி உரிமையை தோல் உரித்துக்காட்டியுள்ளார் சிதம்பரம்” என்றார்.

தொடர்ந்து பேசிய ப. சிதம்பரம், ”பொருளாதாரம் 2018இல் சரிவு ஏற்படும் என்று கணித்திருந்தேன். நான் மட்டுமல்ல பொருளாதார அறிஞர்களும் இதையே கூறினார்கள். ஆனால், இதை அரசு கண்டுகொள்ளவில்லை. அதேபோல் பொருளாதாரம் குறித்து யாரும் பேசுவதோ, எழுதுவதோ கிடையாது. காரணம் இந்தியாவை ஆள்வது அரசியல் கட்சி இல்லை, அச்சம்தான் ஆள்கின்றது.

இந்திய மக்களைப் போல வெகுளி மக்களை நான் எங்கும் பார்த்தது இல்லை. பத்திரிகைகளில் வருவதை அப்படியே நாம் நம்புகின்றோம். இந்திய மக்கள் எதையும் நம்புகின்ற வெகுளித்தனத்தையும் அச்சத்தையும் போக்க வேண்டும். ‘தர்பார்’ போன்ற திரைப்படங்களுக்குச் செலவு செய்வதுபோல் புத்தகம் வாங்குவதற்கும் செலவு செய்ய வேண்டும். அனைவரும் மாதம் ஒரு புத்தகம் வாங்கும் பழகத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். நூலை வாங்கினால்தான் எழுத்தாளர்களும் எழுத்துகளும் பிழைக்கும்” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய கவிஞர் வைரமுத்து, ”மறதி என்னும் நோயினால் தமிழர்களின் ஆளுமை, வரலாற்றுப் பெருமைகள் மிக எளிதாக மூடப்படுகின்றன. ஜாகிர் ராஜா, தன் நாவல் மூலம் சாமானிய உணர்வுகளை காண்பித்துள்ளார். அதே போல் அச்சமில்லை அச்சமில்லை என்று பாதியார் கூறியதை திரும்பக் கூறுவதற்கு நமக்கு சிதம்பரம் தேவைப்படுகின்றார். அரசியல், பொருளாதாரம் குறித்து கூர்மையாக இந்நாவல் தெரிவிக்கிறது. இது அரசிற்கு எதிரானது அல்ல, அரசு நிர்வாகம் செம்மைப்படுவதற்கு சிதம்பரம் அளித்துள்ள நூல்.

சிதம்பரத்தை படுத்திய பாடு அனைவரும் அறிந்ததே. ஆனால், அவரின் சொல் நாகரிகம் என்றும் தவறி விழுந்தது இல்லை. பன்முகத்தன்மை, ஜனநாயகம் ஆகிய தன்மைகளில் இருந்து இந்தியா நழுவுகின்றதா இல்லையா, அவ்வாறு நழுவினால் அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை எடுத்துகாட்டியுள்ளது அச்சமில்லை அச்சமில்லை நூல். அவர் பொறுமையாக இருப்பதால் கோபம் வராது என்று என்ன வேண்டாம், பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு” என்றார்.

Categories

Tech |