குடும்பத்தில் 3-ஆவதாக பிறக்கும் குழந்தைக்கு வாக்குரிமை இல்லை என சட்டம் கொண்டுவர வேண்டும் என்று பாபா ராம்தேவ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் தொகையை கட்டுப்படுத்த 3-ஆவது குழந்தைக்கு வாக்குரிமை கிடையாது என்று சட்டம் கொண்டுவர வேண்டும் என பாபா ராம்தேவ் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் யோகா குரு பாபா ராம்தேவ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ குடும்பத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் யாரும் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது.
3-ஆவது குழந்தைக்கு வாக்குரிமை இல்லை என சட்டத்தை கொண்டுவர வேண்டும். அரசு வழங்கும் பிற சலுகைகளையும் கொடுக்க கூடாது. அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை 150 கோடியாக மாறக்கூடாது. அதனை நாம் தான் தடுக்க வேண்டும். தற்போது எந்த வாக்காளர்களும் அரசு வழங்கும் சலுகைகளை முழுமையாக பெறமுடியவில்லை. இவ்வாறு சட்டத்தை அரசு கொண்டு வந்தால் அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சரி மக்கள் நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அனைத்து நாடுகளும் மதுபானத்தை தடை விதிக்க வேண்டும். இஸ்லாமியர்கள் வாழும் நாடுகளில் மது தடை செய்யப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது இந்தியாவில் ஏன் தடை செய்யமுடியாது. இது முனிவர்கள் வாழ்ந்த பூமி. இந்தியாவில் மதுவை முழுமையாக தடை செய்ய வேண்டும்” என்று அவர் கூறினார்.