ராகுல் காந்தி நடை பயணத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காந்தியடிகள் தொடங்கிய நேரத்திலே காந்தியடிகள் ஒரு மந்திரத்தை தந்தார். ”செய் அல்லது செத்து மடி” என்று சொன்னார். வெள்ளையனை வெளியேற்றும் வரையிலே நம்முடைய பயணம் முடியாது. நம்முடைய முயற்சி நிற்காது என்று ஒரு பெரும் அறைகூவலாக காந்தி அடிகள் சொன்னார்.
இன்று காங்கிரஸ் கட்சியை பார்த்து, இந்த நடை பயணத்தின் உடைய முதல்வர், தலைவர் ராகுல் காந்தியை பார்த்து ‘‘பாரத் ஜோடோ” என்று சொல்லக்கூடியவர்களுக்கு நான் பதில் சொல்கிறேன். வெள்ளையனே வெளியேறு என்று காங்கிரஸ் கட்சியும், கோடிக்கணக்கான இந்திய மக்களும் சொன்னபோது, அந்த போராட்டத்திலே நீங்கள் ( ஆர்.எஸ்.எஸ் ) பங்கு பெறவில்லை. மாறாக அந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்தினீர்கள்.
அந்த போராட்டத்தை கொச்சைப்படுத்தியதன் மூலமாக வெள்ளையன் தொடர்ந்து இந்த நாட்டிலே இருக்க வேண்டும் என்று அவனுடைய அடியிலே நீங்கள் பணிந்தீர்கள். இன்று பாரத் சோடோ இணைப்போம் என்று நாங்கள் சொல்லும் பொழுது, இதையும் நீங்கள் கொச்சைப்படுத்தி இருக்கிறீர்கள், இதையும் நீங்கள் கேலி செய்கிறீர்கள். அப்படி என்றால் ”வெள்ளையன் வெளியேற வேண்டாம்” என்று உங்களுடைய அந்த எண்ணம் இன்று ”இந்தியா ஒற்றுமையாக இருக்கக் கூடாது” என்ற உங்களுடைய எண்ணத்தை பிரதிபலிக்கிறது என தெரிவித்தார்.