டெல்லியில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி வருகிற 2026-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த ரயில் சேவையை இயக்குவதில் மத்திய அரசாங்கம் முயல் வேகத்தில் செயல்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார். அதன் பிறகு ரயில் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லாததால் ரயில் கட்டணம் என்பது உயராது என்ற தகவலையும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவையானது மும்பை-அகமதாபாத் வழிதடத்தில் இயக்கப்படுகிறது. இதற்கான திட்ட மதிப்பு 1.10 லட்சம் கோடியாக இருக்கும் நிலையில், ஜப்பான் 88,000 கோடியை 0.1 சதவீத வட்டியில் இந்தியாவுக்கு கடனாக வழங்குகிறது. இந்த புல்லட் ரயிலின் வழித்தடம் 508 கிலோ மீட்டராக இருக்கும். இதில் 7 கிலோமீட்டர் தூரத்திற்கு கடலுக்கடியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகு புல்லட் ரயிலின் மொத்த வேகம் 350 கிலோமீட்டராக இருக்கும் நிலையில் அதை விட குறைவான வேகத்திலேயே ரயிலை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
அதோடு இந்த ரயிலானது மும்பையில் இருந்து அகமதாபாத் வழித்தடத்தை 2.7 மணி நேரத்தில் கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் மட்டும் ஒரு நாளைக்கு 70 முறை புல்லட் ரயில் சேவையை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மும்பை- அகமதாபாத் மட்டுமின்றி சென்னை-மைசூரு, டெல்லி-வாரணாசி, டெல்லி-அகமதாபாத், மும்பை-நாக்பூர், மும்பை-ஹைதராபாத், டெல்லி-அமிர்தசரஸ், வாரணாசி-ஹவுரா ஆகிய வழித்தடங்களிலும் புல்லட் ரயிலை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளனர்.