இந்தியாவின் பிரதமராக கடந்த 2014-ம் ஆண்டு நரேந்திர மோடி பொறுப்பேற்றதிலிருந்து மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் அகில இந்திய வானொலி வாயிலாக மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டு மக்களுடன் உரையாற்றுவார். அந்த வகையில் நடப்பாண்டின் கடைசி மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுடன் உரையாற்றினார். அவர் கூறியதாவது, 2022-ம் ஆண்டு இந்தியாவுக்கும் மிகவும் அற்புதமான வருடம். நாம் உலக பொருளாதாரத்தில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளோம். அதோடு ஜி-20 மாநாட்டின் தலைமை பொறுப்பை ஏற்கும் பொறுப்பும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
உலக அளவில் கொரோனா வைரஸ் தற்போது பரவி வருவதால் அனைவரும் முகக் கவசம் அணிவதோடு, கைகளை சுத்தமாக வைத்தல் போன்ற அனைத்து கொரோனா கட்டுப்பாட்டு முறைகளையும் பின்பற்ற வேண்டும். இந்நிலையில் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் யோகாசனம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. யோகா செய்தால் நோய் மீண்டும் வருவது 18 சதவீதம் அளவுக்கு குறையும். மருத்துவ அறிவியலில் ஆயுர்வேதம் மற்றும் யோகா இரண்டுமே அங்கீகரிக்கப்படுகிறது. மேலும் கங்கை நதியை தூய்மையாக வைத்திருப்பது நம்முடைய தலையாய பொறுப்பு. கங்கை நதி நம்முடைய கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பிணைப்பை கொண்டுள்ளது என்று கூறினார்.