திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித் வில்சன் 80 மணி நேர போராட்டத்திற்கு பின்பு சடலமாக மீட்கப்பட்டார். குழந்தையின் மரணம் இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளை மூடக்கோரியும் அதில் பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகளை மழைநீர் சேகரிப்பு தொட்டியாக மாற்ற நடவடிக்கை எடுக்கக் கோரியும் அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் ஆழ்துளைக் கிணறுகளை மூடும் பணிகள் மும்முரமாக செயல்படுத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், ஆழ்துளைக் கிணற்றை மூடக்கோரி போன் செய்த இளைஞரை கரூர் மாவட்ட ஆட்சியர் கோபமாகப் பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கரூர் மாவட்டம் தரகம்பட்டி வட்டத்திலுள்ள செம்பிய நத்தம் கிராமத்தில் ஆழ்துளைக் கிணறு ஒன்று மூடப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், இது குறித்து மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் தொலைபேசியின் வாயிலாக தெரிவித்துள்ளார். இதற்கு அவர், உங்களது பகுதி வளர்ச்சி அலுவலரிடம் தகவலை அளித்தீர்களா? அல்லது நேரில் சந்தித்துப் பேசினீர்களா? என்று கேட்டுள்ளார்.
தகவல் அளித்தும் ஆழ்துளைக் கிணறு மூடப்படாததல்தான் உங்களிடம் தெரிவிக்கிறோம் என்று அந்த இளைஞர் ஆட்சியரிடம் கூறியுள்ளார். அப்போது கோபத்துடன் பேசிய ஆட்சியர், “கலெக்டர்னா சரவணபவன் சர்வர்னு நெனச்சிட்டிருக்கீங்களா? பிளடி ராஸ்கல் போனை வை” என்று கடுமையான சொற்களால் பேசி போனை துண்டித்துள்ளார்.தற்போது இந்த ஆடியோ விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.