தொண்டை வலி என வந்தவரை 10 அடி தூரத்தில் நிறுத்தி டார்ச்லைட் மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்த வீடியோ குறித்து மருத்துவர்கள் சங்கம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் செயல்பட்டுவரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில், வாலிபர் ஒருவர் தொண்டை வலிக்கான சிகிச்சை பெற சென்றுள்ளார். அங்கு சென்ற அவரை மருத்துவர்களும், மருத்துவருக்கு உதவியாக பணியாற்றி வந்த பெண் ஒருவரும் 10 அடி தூரத்திற்கு முன்பே நிறுத்தி டார்ச் லைட் அடித்து தொண்டையை காட்டும் படி கூறியுள்ளனர். இதையடுத்து அவர் வாயைத் திறக்கவே 10 அடி தூரத்தில் நின்ற வாலிபரின் தொண்டையை டார்ச்லைட் மூலம் பார்த்துவிட்டு மருந்து மாத்திரைகளை அளித்து வழி அனுப்பி உள்ளார்.
இதை கண்ட பொதுமக்களில் சிலர் இதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவி விட்டனர். இது வைரலாக பரவி வரவே, சுகாதாரத்துறை பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின் அவர்கள் சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவர்களிடம் இது குறித்து விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியிருந்தனர். தற்போது இதற்கு அரசின் அறிவுரைப்படி, சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.
ஆனாலும் இந்த விளக்கம் திருப்திகரமாக இல்லை எனவும் கருத்துக்கள் பரவி வருகின்றன.இருப்பினும் நமக்காக அயராது உழைக்கும் மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கும் கொரோனா அச்சம் என்பது இருக்கத்தான் செய்யும். எனவே சாதாரண மக்களாக இருந்தாலும் சரி, மருத்துவர்களாக இருந்தாலும் சரி மனிதாபிமானத்துடனும் ஒற்றுமையாக இந்த கொரோனா காலத்தில் பணியாற்றி வந்தால் அனைத்தும் நன்றாக இருக்கும் என பொதுமக்கள் சார்பில் கருத்துகள் நிலவி வருகின்றன.