ஹூபே மாகாணத்தில் பணியாற்றி விட்டு, சொந்த ஊருக்கு திரும்பும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை கவுரவிக்கும் விதமாக பிரமாண்ட எல் ஈடி திரைகள் அமைக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர்.
கொரோனா வைரசின் பிறப்பிடம் மத்திய சீனாவின் ஹூபேய் மாகாணம் தான். ஆம், இந்த மாகாணத்தில் இருக்கும் வூஹான் நகரில் தான் கடந்த டிசம்பர் மாதத்தில் கொரோனா என்ற கொடிய வைரஸ் பரவுவது முதலில் கண்டறியப்பட்டது. சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் ஹூபேய் மாகாணத்தை சேர்ந்தவர்களாகள் தான். இந்த கொடிய வைரசால் சீனா முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 80,000 பேரில் 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த மாகாணத்தையே சேர்ந்தவர்கள் ஆவர்.
சீனாவில் இதுவரையில் 3,245 பேர் பலியாகியுள்ளனர். ஆனால் முன்பை விட சீனா தற்போது உயிரிழப்பை மிகவும் கட்டுப்படுத்தி விட்டது. காரணம் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இரவு பகல் பாராமல் சிகிச்சை அளித்தது தான். தொடக்கத்தில் உயிரிழப்பு நாளுக்குநாள் அதிகரித்தாலும், துவண்டு போகாத மருத்துவர்கள் தன்னம்பிக்கையை விடாமல் போராடி கட்டுப்படுத்தியுள்ளனர்.
அதற்கு பலன் கிடைத்துவிட்டது. குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட ஹூபே மாகாணத்தில் மருத்துவர்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கடுமையாக உழைத்தனர். ஹூபேய் மாகாணத்தில் கடந்த 36 மணி நேரத்தில் எந்த ஒரு நபருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று அந்த மாகாண சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஹூபே மாகாணத்தில் பணியாற்றி விட்டு, சொந்த ஊருக்கு திரும்பும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை கவுரவிக்கும் விதமாக 18 நகரங்களில் 50 ஆயிரம் பிரமாண்ட எல் ஈ டி திரைகள் அமைக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். முக்கிய கட்டிடங்களில் இந்த பிரமாண்ட திரைகளில் மருத்துவர்களின் படங்களுடன் வைக்கப்பட்டிருந்தது. அத்துடன், அந்த திரைகளில் அவர்களை வரவேற்கும் வாசகங்களும் இடம்பெற்றிருந்தன. இதற்கு மக்கள் வரவேற்பு தெரிவித்தனர்.