கோவை அரசு மருத்துவமனையில் 7 வயதுடைய சிறுவனின் கழுத்தில் குத்திய தொட்டில் கொக்கியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றி சாதனை படைத்துள்ளனர்..
திருப்பூர் பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த சிவராஜ் என்பவருடைய மகன் ரிதிகேஷ்வரன்.. 7 வயதுடைய இந்த சிறுவன் அந்த பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறான். தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் சிறுவன் வீடு அருகேயுள்ள ஒரு மரத்தில் தொட்டில் கட்டி ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தான்.
தொடர்ந்து நேற்று முன்தினமும் சிறுவன் மரத்தில் ஏறி தொட்டில் கட்டும் போது திடீரென எதிர்பாராதவிதமாக மரக்கிளை ஒடிந்து கீழே விழுந்து விட்டான்.. அப்போது கீழே கிடந்த தொட்டில் கட்டும் கொக்கி கம்பி சிறுவனது வலது கழுத்து பகுதியில் பலமாக குத்தி வலது காது வழியாக வெளியே வந்தது. இதில் இரத்தம் வெளியேறி சிறுவன் அலறித்துடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான்.
இதனைப்பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக சிறுவனை கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்தனர்.. அங்கு சிறுவனை குழந்தைகள் அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதித்த மருத்துவர்கள் சி.டி. ஸ்கேன் உள்ளிட்ட அனைத்து மருத்துவ பரிசோதனைகளையும் செய்தனர்.
அதில், சிறுவனின் கழுத்து பகுதியில் குத்திய அந்த கம்பியானது 12 மி.மீ. அகலமும், 2 அடி நீளமும் கொண்ட கொக்கி கம்பி என்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்து கொக்கி கம்பியை எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனை டீன் காளிதாஸ் அறிவுறுத்தலின்படி, குழந்தைகள் அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் ரங்கராஜன் தலைமையில் மருத்துவர்கள், சீனிவாசன், முத்துலிங்கம், செந்தில்குமார், தர்மேந்திரா மற்றும் மயக்கவியல் துறைத் தலைவர் ஜெய சங்கர நாராயணன், வசந்தி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.
இதில் வெற்றிகரமாக சிறுவனின் கழுத்து பகுதியில் மாட்டிக்கொண்ட கொக்கி கம்பியை அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்தனர். தற்போது அந்த சிறுவன் உடல்நிலை தேறி நல்ல நிலையில் இருக்கிறான். சாதனை படைத்த மருத்துவர்கள் குழுவினரை டீன் காளிதாஸ் பாராட்டுக்கள் தெரிவித்தார். அதேபோல சிறுவனது பெற்றோரும் மருத்துவ குழுவினருக்கு நன்றி கூறினர்..