Categories
கல்வி

புத்தகம் மட்டும் சிறந்த கல்வியை தந்துவிடுமா?….. சிறந்த கல்விக்கு மற்ற திறன்களும் தேவை! 

கல்வி என்பது ஏட்டுக்கல்வியாக இல்லாமல் நல்ல  மனிதர்களை உருவாக்கும் கல்வியாக இருக்க வேண்டும். ஒருவர் தன்னைப் பற்றிய சுய ஆய்வு செய்து, தனது பலம், பலவீனம், பிடித்தது, பிடிக்காதது, தனது தனித்திறமைகளை,  தனது குறிக்கோள்கள், அவற்றை அடைய வாய்ப்புகள் மற்றும் தடைகள் பற்றி தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். சிறந்த கல்விக்கு என்னென்ன திறன்கள் தேவை என தெரிந்து கொள்வோம். 

உணர்ச்சிகளைக் கையாளும் திறன் : 

தமது உணர்ச்சிகளை சரியாகப் புரிந்து கொண்டு, அவற்றை முறையாக வெளிப்படுத்தும், கையாளும் திறன். ஆங்கிலத்தில் ‘எமோஷனல்  இன்டெலிஜென்ஸ்’ என்று கூறப்படுகிற உணர்ச்சிகளைக் கையாளும் அறிவு சார்ந்த திறனை இளைஞர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.  

பிறரைப் புரிந்துகொள்ளும் திறன்பிறர் நிலையில் தன்னை இருத்திப் பார்த்து, பிறரது உண்மையான நிலையையும், தேவைகளையும் புரிந்துகொண்டு,  பிறர் நலனில் கவனம் செலுத்தி செயலாற்றும் திறனைப் பெற வேண்டும்.

ஆழ்ந்து சிந்திக்கும் திறன் : 

பார்த்து, கேட்டு, உரையாடி, அனுபவித்து, அலசி, சேகரித்த தகவல்களை, முறையாக கொள்கைப்படுத்த, நடைமுறைப்படுத்த,  மதிப்பிட வகை செய்யும் சிந்தனைத்திறனாம், ஆழ்ந்து சிந்திக்கும் திறன் வேண்டும்.

ஆக்க சிந்தனைத் திறன் : 

ஒரேமாதிரியாகச் சிந்திக்காமல்,(ஆங்கிலத்தில் ‘கிரியேட்டிவ் திங்கிங்’) மாறுபட்ட அல்லது படைப்புச் சிந்தனையுடன், ஒரு கேள்விக்கு ஒன்றுக்கு மேல்  தீர்வுகளை தேடும் சிந்தனை வேண்டும். இது படைப்புத்திறன் சார்ந்த சிந்தனை.

முடிவெடுக்கும் திறன் : 

முடிவெடுக்கும் நோக்கத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, சாத்தியமான வழிகளைக் கண்டறிந்து, அவற்றில் சிறந்த வழியைத் தேர்ந்தெடுத்து,  முடிவெடுக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பிரச்னையை தீர்க்கும் திறன் : 

பிரச்னையைத் தெளிவாக வரையறுத்து, தீர்க்கும் வழிகளைக் கண்டறிந்து, சிறந்த வழியை ஆய்ந்து தேர்ந்து,  அதன்மூலம் பிரச்னையைத் தீர்க்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மன அழுத்தத்தைத் தவிர்க்கும் திறன் : 

மன அழுத்தம் மற்றும் பதற்றத்திற்கு ஒருவர் ஆளாகும்போது அதற்கான அடிப்படைக்கு காரணங்களையும், அதைக் களைவதற்கான வழிகளையும்  தெளிவாகப் புரிந்துகொண்டு, அவற்றைக் கடைப்பிடித்து, மன அமைதியையும், மன ஆரோக்கியத்தையும் விரைந்து அடையும் திறன் வேண்டும்.

வாழ்க்கைத் திறன் : 

பாடங்களில் அதிக மதிப்பெண் பெற மனப்பாடம் என்ற தத்துவத்தைக் கடைபிடிக்கிறோம். அதை வாழ்க்கைத் திறன்களைப்பெற  பயன்படுத்த முடியாது. ஆசிரியர்கள், மாணவர்கள் உரையாடல் மூலமும், செய்முறை மூலமும்தான் இணைச் செயல்களை புரிந்துகொள்ளவைக்க முடியும். 

இணைவுக் கல்விகளான சுகாதாரம், சாரணர் இயக்கம், இளஞ்செஞ்சிலுவைச் சங்கம், தேசிய பசுமைப்படை பயிற்சி, போதைப்பொருட்களின் தீமைகள், தீண்டாமை ஒழிப்பு, மூடநம்பிக்கைகளை விட்டொழித்தல்,  அறிவியல் ரீதியில் செயல்படுதல், விவசாயம்சார்ந்த தகவல்கள் போன்றவற்றிற்கு பொதுக்கல்விபோல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

Categories

Tech |