ஆறு மாத பயிற்சிக்குப் பின் நான்கு மோப்ப நாய்கள் சிறப்பான திறன்களை வெளிப்படுத்தி ரயில்வே போலீசில் பணியை துவங்கியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள அயனாவரத்தில் தலைமையிடமாக கொண்டு சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட துப்பறியும் மோப்ப நாய் பிரிவு இயங்கி வருகிறது. அங்கு ரயில்வே போலீஸில் டைசன், செல்லி என்ற வெடிகுண்டுகளை மோப்பம் பிடிக்கும் திறன் கொண்ட இரண்டு மோப்ப நாய்கள் வாங்கப்பட்டுள்ளது. இந்த மோப்ப நாய்கள் ரயில் நிலையங்களில் வெடிகுண்டு மிரட்டல், நடைமேடைகள், தண்டவாளங்கள், ரயில் வண்டிகளில் முக்கிய பாதுகாப்பு போன்ற சமயங்களில் சிறப்பான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு செல்லியும் 2011ஆம் ஆண்டு டைசனும் உடல் நலக்குறைவால் இறந்ததால் ஜெஸ்ஸி மற்றும் ஜாக் என்ற இரண்டு மோப்ப நாய்கள் புதிதாக வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த மோப்ப நாய்களும் இறந்து விட்டதால், கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆகாஷ், ஏஞ்சல் என்ற இரண்டு போதைபொருள் கண்டறியும் மோப்ப நாய்களும், வெடிகுண்டுகளை கண்டறிய சூர்யா என்ற மோப்ப நாயும், குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க சாரா என்ற மோப்ப நாயும் வாங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகர மோப்பநாய் பிரிவு படையில் பயிற்சியாளர் மூலம் 6 மாத பயிற்சி அளிக்கப்பட்ட பிறகு, இந்த நான்கு மோப்ப நாய்களும் ரயில்வே டி.ஜி.பி சைலேந்திரபாபு முன்னிலையில் தாங்கள் பயிற்சியில் கற்றுக்கொண்டதை செய்து காண்பித்துள்ளன. இவைகள் சிறப்பான திறனை வெளிப்படுத்தியதால் இந்த நான்கு மோப்ப நாய்களும் ரயில்வே போலீஸில் தங்களது பணியை துவங்கியுள்ளன.