இங்கிலாந்தில் கொரோனா பாதித்தவர்களை நொடிப்பொழுதில் கண்டுபிடிக்க மோப்ப நாய்களை உபயோகப்படுத்த உள்ளனர்
இங்கிலாந்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு நாளுக்கு நாள் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்நாட்டில் ஒரு நாளைக்கு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நபர்களின் எண்ணிக்கை 21 ஆயிரம் என்ற அளவிலேயே இருந்து வருகிறது. இதனை அதிகரித்து நாளொன்றுக்கு லட்சம் மக்களை பரிசோதனை செய்தால் மட்டுமே நாடு முழுவதும் இருக்கும் கொரோனா தாக்கியவர்களை கண்டுபிடித்து தீவிர சிகிச்சை அளிக்க முடியும் என்கிற நிலை உருவாகியுள்ளது.
இதனிடையே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை மோப்ப நாய் மூலம் கண்டுபிடிக்க பயிற்சி அளிக்கும் முயற்சிகளும் நடந்து வருகிறது. இதற்கு முன்னதாக மலேரியா மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மோப்ப நாய்கள் மூலம் கண்டுபிடிப்பதில் வெற்றி கண்ட மெடிக்கல் டிடெக்சன் டாக்ஸ் சாரிட்டி என்ற தொண்டு நிறுவனம் கொரோனா தொற்றை கண்டுபிடிப்பதற்கான மோப்ப நாய்களை தயார் செய்யவும் முன்வந்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைவர் கிளாரியா கூறியிருப்பதாவது, “தொற்று பாதிக்கப்பட்டவர்களை சில நொடிகளிலேயே மோப்ப நாய்கள் வைத்து கண்டுபிடித்து விட முடியும். இதற்கு 6 முதல் 8 வாரங்கள் பயிற்சி கொடுத்தால் போதுமானது. லேப்ரடார் ரெட்ரீவர் இன மூன்று ரக நாய்களை இதற்கென்று பிரத்யேகமாக தயார் செய்ய உள்ளோம். கொரோனா அறிகுறிகளுடன் இருப்பவர்களும் அறிகுறி இல்லாமல் இருப்பவர்களையும் இந்த நாய்கள் மோப்ப சக்தி மூலம் கண்டுபிடித்து விடும்.
இதனால் தொற்று பாதிக்கப்பட்டவர்களை விமான நிலையத்திலேயே கண்டறிந்து சிகிச்சைக்கு கொண்டு போக முடியும். இந்த மோப்ப நாய்களை இங்கிலாந்தில் இருக்கும் அனைத்து விமான நிலையங்களிலும் பயன்படுத்தி கொரோனா தொற்று உடையவர்களை நாட்டுக்குள் நுழைய முடியாதவாறு செய்ய முடியும். லேப்ரடார் இனத்தின் மூன்று ரக நாய்களுக்கும் பயிற்சி அளிப்பதற்கு 4.8 கோடி ருபாய் செலவாகும்” என கூறியுள்ளார்.