வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடன், அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் தற்போதும் தொடர்பில் இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 2017 வருடத்திலிருந்து 2021 வருடம் வரை அதிபராக இருந்தவர் டொனால்ட் டிரம்ப். அவர் பதவியில் இருந்த சமயத்தில், அமெரிக்காவிற்கும் வட கொரியாவுக்கும் இடையே நல்ல உறவு இருந்தது. மேலும், வடகொரியாவின் அதிபரான கிம் ஜாங் உன்-உடன் ட்ரம்ப் தனிப்பட்ட முறையில் நட்பு கொண்டிருந்தார்.
இந்நிலையில், தற்போதும் வடகொரிய அதிபருடன் டிரம்ப் தொடர்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் பற்றி கான்பிடண்ட் மென்: தி மேக்கிங் ஆஃப் டொனால்டு டிரம்ப் அண்ட் பிரேக்கிங் ஆஃப் அமெரிக்கா என்னும் தலைப்பில் மேகி ஹபிர்மென் ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார்.
மேலும் அவரின் நேர்காணலில், முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் தற்போது வரை வட கொரிய அதிபருடன் தொடர்பில் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். இது மட்டுமன்றி, வட கொரிய அதிபருடன் மட்டும் தான் அவர் தொடர்பில் இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்ரம்ப் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்- உடன் மட்டும் தான் நான் பேசுவதாகவும், பிற உலக தலைவர்களுடன் தொடர்பில் இல்லை என்றும் மேகி ஹபிர்மென் கூறியிருப்பது தவறு என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.