பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்கும் திமுக அரசை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்து இருக்கிறோம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரை புறக்கணித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாநிலத்தின் நிதி நிலை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று கூறி ஒரு வெற்று அறிக்கையை மாண்புமிகு நிதியமைச்சர் வெளியிட்டு இருக்கின்றார். ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் மாண்புமிகு அம்மா அரசு என்ன கூறியதோ அதையே ஒட்டுமொத்தமாக வெளியிட்டுள்ளனர்.
பேட்டியின்போது 16 வது நிதி குழு மதிப்பீட்டின் அடிப்படையில் வரி வருவாயில் ரூபாய் 75 ஆயிரம் கோடி இழப்பு என்றும், ரூபாய் 25 ஆயிரம் கோடி திட்ட நிதி முறையான பயனாளிகளுக்கு செல்லவில்லை என்றும் ஒரு தவறான கருத்தை வெளியிட்டுள்ளார். 14வது நிதிக்குழு ஒரு குறிப்பிட்ட வரி… உத்தேச மதிப்பீடு தான். ஆனால் அதுவே வசூலிக்கப்பட வேண்டிய வரி ஆகாது. அதேபோல செலவு பற்றியும், ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
வெள்ளை அறிக்கை ஒரு விளம்பரம் தேட எடுத்த முயற்சிதான். ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் அனைத்துமே…. அரிசி குடும்ப அட்டை அடிப்படையிலே வழங்கப்படுகின்றது. 2006 – 2011இல் திராவிட முன்னேற்ற கழக அரசு வழங்கிய டிவி அரசி குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்பட்டதை போல தான் அம்மா அரசும் பின்பற்றியது.
2011ஆம் ஆண்டில் அவர்களின் அரசும் இதே தவறை செய்தது என்கீறீர்களா ? மேலும் இது தவறு எனில் திராவிட முன்னேற்ற கழக அரசு தற்போது வழங்கிய கொரோனா நிதியில் அவர்கள் விரும்பிய மாற்றத்தை செய்து இருக்கலாமே..? எனவே ஊதாரித்தனமாக செலவு செய்த முன்னாள் அரசு என அரசியல் காழ்புணர்ச்சியோடு விமர்சனம் செய்த மாண்புமிகு நிதியமைச்சரை கண்டித்தும் வெளிநடப்பு செய்துள்ளோம்.
மூச்சுக்கு 300தடவை பத்திரிகை சுதந்திரம் பற்றி பேசுபவர் திராவிட முன்னேற்ற கழக தலைவர் முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள்.கடந்த 9: 8: 2021 அன்று கழக நாளிதழ் நமது அம்மா நாளிதழ் அலுவலகம் பூட்டை உடைத்து திமுக அரசின் காவல்துறை உள்ளே நுழைந்து சோதனை நடத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது. சோதனையின்போது நமது அம்மா ஊழியர்களில் எவரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.
அடுத்தநாள் வெளியிட வேண்டிய பத்திரிகை அச்சிட்டு வெளியிடுவதற்கு எங்களை உள்ளே அனுமதியுங்கள் என்று காவல் துறையினரிடம் பத்திரிகை ஊழியர்கள் எவ்வளவோ கெஞ்சியும் ஒருவரைக் கூட உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் அன்றைய பத்திரிக்கை அச்சடிக்க முடிக்காமல் 10.08.2021 அன்று வெளியிட வேண்டிய நமது அம்மா நாளிதழ் வெளியிட வில்லை. இது போன்ற பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்கும் திமுக அரசை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்து இருக்கிறோம் என தெரிவித்தார்.