நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த கோகுல்ராஜ் என்ற மாணவன் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தற்கொலை செய்து கொண்டார். இந்த மாணவனின் தாயார் கலா கடந்த 2018-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் மாணவர்களின் தலைமுடியை வெட்டி, சட்டை காலரை கிழித்து தலைமை ஆசிரியர் துன்புறுத்தியதால் தான் தன்னுடைய மகன் தற்கொலை செய்து கொண்டதாக புகார் மனுவில் கலா தெரிவித்து இருந்தார். அதோடு சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரின் மீது நடவடிக்கை எடுப்பதோடு, 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தலைமை ஆசிரியர் மாணவர்களிடம் ஒழுக்கத்தை கடைபிடிக்குமாறு வலியுறுத்தி அதன்படியே நடந்துள்ளார் என்று கூறினார். அதன்பிறகு தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்தபோது பள்ளியின் தேர்ச்சி விகிதம் 45 சதவீதத்திலிருந்து 90 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றும், மாவட்ட கல்வி தலைமை அதிகாரி நடத்திய விசாரணையின் போது மாணவரின் தாயார் அளித்த புகார் பொய் என்பது தெரியவந்துள்ளது எனவும் வழக்கறிஞர் கூறினார். இதனையடுத்து தலைமை ஆசிரியர் ராபர்ட், உயிரிழந்த மாணவர் 50 சதவீதம் மட்டுமே வகுப்புகளுக்கு வருவார் என்றும், தன் மீது பொய்யான புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த பிறகு நீதிபதி அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மாணவரின் தாயார் கூறிய புகார் பொய் என்பது தெரியவந்துள்ளது என்று கூறினார். அதன் பிறகு ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் ஒழுக்கத்தில் மட்டும் தான் அக்கறை கொள்வார்கள். அப்படிப்பட்ட ஆசிரியர்களை ஊக்கப்படுத்த தவறினால், ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் தங்களுடைய கடமைகளை செய்ய மாட்டார்கள். காரணம் இல்லாமல் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களை குறை கூறக்கூடாது. ஒரு பெற்றோர் பள்ளியின் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரை குறை கூறுவதற்கு முன்பாக தங்களுடைய பிள்ளைகளின் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டில் அக்கறை கொள்ள வேண்டும். மேலும் சமுதாயத்திலும் தங்களுடைய பிள்ளைகளை அர்ப்பணித்து பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை என்றும் கூறி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார்.