செங்கல்பட்டு அருகே வயிற்று வலி காரணமாக இளைஞர் தூக்கில் தொங்கிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து நேற்றையதினம் துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து சந்தேகம் அடைந்த ஊர் பொதுமக்கள் உடனடியாக மறைமலை நகர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ஜன்னலைத் திறந்து பார்க்கையில், ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் தூக்கில் தொங்கி காணப்பட்டது.
பின் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். பின் மேற்கொண்ட விசாரணையில் அவர் பெயர் ஆண்டனி ஸ்டீபன்ராஜ் என்பதும், செங்கல்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது.
இவரது தாய் சில மாதங்களுக்கு முன்பு உயிரிழக்க தந்தை அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். வீட்டில் சமையல் செய்ய ஆள் இல்லாத காரணத்தால் ஹோட்டலில் சாப்பிட்டு வர அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு அதனால் ஏற்பட்ட அவதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்தது. மேலும் இந்த தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விரிவான விசாரணையை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.