காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு என்னுடைய பெயரை இழுக்காதீர்கள் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தல் காங்கிரஸ் கட்சியின் தோல்வியை தொடர்ந்து தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகினார். மேலும் அவரின் ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியினர் திரும்ப பெற வலியுறுத்தியும் , ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருந்து வருகின்றார். மேலும் ராஜினாமா குறித்த விளக்கம் கடிதம் வெளியிட்ட ராகுல் மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பலரை பொறுப்பாக வேண்டுமென்று தெரிவித்தார்.
மேலும் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்கள் பதவி விலகினர்.ஆனால் ராகுல் காந்தி தலைவர் பதவியில் நீடிக்க வேண்டுமென்று பலரும் வலியுறுத்தினர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு பிரியங்கா காந்தி சரியான தேர்வு என்று பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் தெரிவிக்கையில் , பிரியங்கா காந்தியை காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்தால் அனைத்து தரப்பில் இருந்தும் ஆதரவு கிடைக்கும் என்று குறிப்பிட்ட அவர் , பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கான சரியான தேர்வு என்றும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார் என்பது செயற்குழுவை சார்ந்தது என்றும் , செயற்குழுவால் மட்டுமே அதிகாரம் எடுக்க முடியும் என்று பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில் , பிரியங்கா காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக பொறுப்பேற்க சரியான நபர். கட்சி தொண்டர்களுடன் பழகும் தன்மை , மக்களை வசீகரிக்கும் ஆற்றல் , எதிர்க்கட்சியினரை அனைத்து வகையிலும் எதிர்கொள்ளும் துணிவு போன்ற பல காரணிகளை அடுக்கிக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு என்னுடைய பெயரை இழுக்காதீர்கள் என்று தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகின்றது. ஏனெனில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தன்னுடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் வருவதை ராகுல் காந்தி விரும்பவில்லை என்று நிர்வாகிகள் கிசுகிசுக்கின்றனர். ஆனாலும் காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு விதமாக பிரியங்கா காந்தி கடந்த சில வாரமாக அதிகமாக முன்னிறுத்த படுகின்றார்.