கொரோனா தடுப்புக்காக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை அனுப்பிய இந்தியாவுக்கு அமெரிக்கா அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்புக்காக மலேரியாவுக்கு கொடுக்கப்பட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை இந்தியா தர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டிருந்தார். இந்தியாவில் உள்நாட்டு பயன்பாட்டு பற்றாக்குறையாக மாறிவிடக் கூடாது என்பதால் இந்த மருந்தை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்து. இதனால் அமெரிக்க அதிபர், இந்தியாவுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசி இருந்தார்.
இந்தியா மருந்து கொடுக்கவில்லை என்றால் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு மனிதாபிமானம் அடிப்படையில் கொடுப்பதாக இந்திய வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். டிரம்ப்புக்கு பயந்து கொண்டு இந்தியா மருந்து கொடுத்துள்ளது என விமர்சனங்கள் எழுந்ததையடுத்து இதை அரசியல் ஆக்க வேண்டாம் என மத்திய அரசு தெளிவு படுத்தியது.
இந்நிலையில் அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து அனுப்பும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து அதிபர் ட்ரம்ப் ட்விட் செய்துள்ளார். கொரோனா தடுப்புக்காக ஹைட்ராக்சிகுளோரோகுயின் அனுப்பும் இந்தியாவையும், இந்திய மக்களையும் மறக்க மாட்டோம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.