சென்னையில் ஜனவரி 19 ஆம் தேதியன்று 1,645 சிறப்பு முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
இந்தியாவில் கடந்த 24 ஆண்டு காலமாக போலியோ சொட்டு மருந்து 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதை கடைப்பிடிக்கும் விதமாக இந்த ஆண்டு ஜனவரி 19ம் தேதியன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நாடானது போலியோ நோய் அற்ற நாடு என்று உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பின்பும்கூட அண்டை நாடுகளில் போலியோ நோய் தாக்கம் இருக்கும்பட்சத்தில் எக்காரணத்தைக் கொண்டும் நம் நாட்டில் போலியோவை நுழைய விடக்கூடாது என்பதில் இந்திய சுகாதாரத் துறை அமைப்பு கட்டுக்கோப்புடன் செயல்பட்டு வருகிறது.
ஆகையால் இவ்வாண்டு சென்னையில் மட்டும் சுமார் 1,645 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு 7.3 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ மருந்து அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகையால் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை வைத்திருக்கும் அனைத்து தாய்மார்களும் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள போலியோ சொட்டு மருந்து முகாமில் குழந்தைகளை அழைத்துச் சென்று போலியோ சொட்டு மருந்தை குழந்தைகளுக்கு அளிக்குமாறு சுகாதாரத்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.