கரூர் அருகே 12 மாணவர்கள் இடைநிற்றலுக்கு தலைமை ஆசிரியர் தான் காரணம் என்று கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம் ஜெகதாபி அருகே உள்ள பழனியாபுரம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு வகுப்பில் 28 மாணவர்கள் படித்து வந்தனர். கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே ஒரு சிலர் பள்ளிக்குச் செல்ல பிடிக்கவில்லை என்று கூறி 12 பேர் பள்ளி செல்வதை நிறுத்திவிட்டு பின் அருகில் உள்ள ஜவுளி கடையில் வேலை பார்க்க தொடங்கினர்.
12 பேர் பள்ளிக்கு செல்லாமல் இடைநின்றது அப்பகுதி பெற்றோர்கள் மற்றும் ஊர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி மாணவர்களிடம் சிறிது நாள் கழித்து விசாரித்தபோது 100% தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக தலைமையாசிரியர் எங்களை பள்ளியிலிருந்து நிறுத்த வைப்பதற்கு பல்வேறு விதமாக மன உளைச்சல் அளித்ததார் நின்றுவிட்டோம் என்று அவர்கள் தெரிவிக்க ஆத்திரமடைந்த பெற்றோர்களும் கிராம மக்களும் பள்ளி முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளித்தனர்.
ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதி மாரியம்மன் கோவில் அருகே ஒன்று திரண்டு ஊர்மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இடை நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோஷங்கள் எழுப்பினர்.
பின் இது குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளை தனியாக அழைத்து விசாரணை மேற்கொண்டார். பின் இதுகுறித்த அறிக்கை தயார் செய்யப்பட்ட பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.