திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடிக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை என்றும், கர்நாடகா, ஆந்திரா எல்லையோரத்தில் உள்ள வணிக வளாகங்கள் , திரையரங்குகள் மூடப்படும் என்ற உத்தரவையும் பிறப்பித்தது. 16ஆம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள ப்ரீகேஜி , எல்கேஜி , யூகேஜி தொடங்கி ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை என்று உத்தரவிட்ட தமிழக அரசு, பொதுமக்கள் யாரும் அதிகமாக கூட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. மூன்று வயதுக்கு குறைவாக உள்ள குழந்தைகள் பயிலும் அங்கன்வாடிக்கு முறையான விடுமுறை விடவில்லை என்று பெற்றோர்களும் , சமூக ஆர்வலர்களும் ஆதங்கத்தை தெரிவித்தநிலையில் திருவாரூரில் அங்கன்வாடிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் ஆனந்தன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அங்கன்வாடி ஊழியர்கள் வழக்கம் போல அங்கன்வாடி மையத்திற்கு வந்து தேவையான சத்துணவுகளை தயாரித்து அந்தந்த குழந்தைகளின் வீடுகளுக்கு சென்று வழங்கவும் ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.