தமிழகம் முழுவதும் திமுகவின் எம்.பி ஆ.ராசா பேசியதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. ஆ.ராசாவுக்கு எதிராக பாஜகவினர், இந்து முன்னணி அமைப்பினர் உள்ளிட்டோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வருகிறார்கள். அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அடுத்தடுத்து பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான் இன்று விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி, அதில் ஆ.ராசாவின் புகைப்படத்திற்கு கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, செருப்பு மாலையோடு புகைப்படத்தை அண்ணாவின் கழுத்தில் தொங்க விட்டனர். மேலும் அண்ணாவின் முகத்தை திமுக கொடியினால் மறைத்து, சிலையை உடைத்து சேதப்படுத்தினர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எந்த காரணத்திற்காகவும் மறைந்த தலைவர்கள் சிலையை அவமதிப்பதை தொடர விடக்கூடாது. இதற்கு காரணமானவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச்சிலை அவமதிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமானவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எந்த காரணத்திற்காகவும் மறைந்த தலைவர்களின் சிலைகளை அவமதிப்பதைத் தொடரவிடக்கூடாது.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 26, 2022