Categories
அரசியல் மாநில செய்திகள்

பூனை அல்ல புலி ….”போகப் போக காட்டுறேன்”…. MGR பாடலுடன் TTV அறிக்கை …!!

அதிமுக உருவாக்கப்பட்ட நாளை முன்னிட்டு அமமுக பொது செயலாளர் TTV.தினகரன் 3 பக்க அறிக்கை வெளியிடட்டுள்ளார்.

நாளை தினம் அதிமுக உருவாக்கப்பட்ட நாள் அதாவது 1972_ஆம் ஆண்டு அக்டோபர் 17_ஆம் நாள் MGR அதிமுக என்ற கட்சியை தொடங்கினார். 48_ஆம் ஆண்டை நினைவு கூறும் வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் TTV தினகரன் தொண்டர்களுக்கு 3 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார் அதில் , தந்தை பெரியாரின் வழியில் பேரறிஞர் அண்ணா ஆரம்பித்த இயக்கத்தை சுயநலம் ஒன்றையே நோக்கமாகக் கொண்ட தீய சக்திகள் திசை மாற்றி கொண்டு சென்ற போது அவர்களிடமிருந்து தமிழ் நாட்டை மீட்டெடுக்க புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் அக்டோபர் 1972 ஆம் ஆண்டு 17 அன்று அதிமுக என்னும் இயக்கத்தை உருவாக்கினார்.

அன்று ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி தீய சக்திகள் கொடுத்த அத்தனை இன்னல்களையும் , இடையூறுகளையும் எதிர்த்து நின்று மக்களின் மனதை வென்று காட்டி இயக்கத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார். புரட்சித்தலைவர் இருந்தவரை எதுவுமே செய்ய முடியாதவர்கள் அவருக்கு பிறகு அண்ணா திமுக அவ்வளவுதான் என மனப்பால் குடித்தனர். அவர்களின் கனவை பொய்யாக்கிய தொண்டர்கள் தலைவியாக இருந்து தமிழ்நாட்டு மக்களின் தாயாக உயர்ந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அண்ணா பெயரிலான இயக்கத்தை இந்த நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக மாற்றினார்.அம்மா அவர்கள் மறைந்து மீண்டும் அதிமுக இருள் சூழ்ந்த போது அம்மா உருவாக்கிய ஆட்சியையும் அதிகாரத்தையும் தியாகத் தலைவி சின்னம்மா சேதாரமின்றி காப்பாற்றினார்.

தன் சொந்த நலன் பாராது தமிழ்நாட்டின் நலனை மனதில் வைத்து அம்மா அவர்களின் ஆட்சியை  எடப்பாடி பழனிச்சாமி ஒப்படைத்தார். ஆனால் துரோகத்தின் வடிவமான இவர்கள் ஆட்சியையும் , கட்சியையும் சுயநலத்திற்காக அடகு வைத்து , சிங்கமென நிமிர்ந்து நின்று எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து அம்மா அவர்களின் புகழுக்கும் , பெருமைக்கும் களங்கம் ஏற்படுத்தி விட்டார்கள். அம்மா அவர்கள் மக்களின் நலன் கருதி எதிர்த்த திட்டங்களுக்கு எல்லாம் தங்களின் சுயநலத்திற்காக தலை வாசலை திறந்து விட்டு தமிழகத்திற்கு துரோகம் இழைத்து விட்டார்கள். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில்தான் தமிழ் நாட்டின் நலனை மீட்டெடுக்க வேண்டிய பெரும் பொறுப்பால் லட்சோப லட்சம் தொண்டர்களுடன் அம்மா அவர்களின் பெயரையும்,  உருவத்தையும் தாங்கிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சட்டத்தின்வழி நின்று நடத்தி வருகின்றோம்.

புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கும் , தியாகத் தலைவி சின்னம்மா அவர்களின் துரோகமிழைத்த துரோகிகள் ஒரு பக்கம் ,  இன்னொருபுறம் நமக்கு மட்டுமல்ல , தமிழக மக்களுக்கு நிரந்தர எதிரியான திமுக உள்ளிட்ட தீய சக்திகளை ஒரே நேரத்தில் எதிர்கொண்டு அம்மாவின் இயக்கத்தை மீட்டெடுக்கும் நம்முடைய புனிதமான இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றோம். இடையில் சந்தித்த தேர்தலில் நமக்கு எதிராக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பின்னடைவை சந்தித்தோம். அதை பயன்படுத்தி நம்மை மொத்தமாக வீழ்த்திவிடலாம் என்று சிலர் கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். மிட்டாய் காட்டி குழந்தையை பிடிப்பது போல நம்மிடம் இருந்த சில பலவீனமிக்கவர்களை பிடித்துச் சென்று அந்த இயக்கம் அவ்வளவு தான் என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் அரசியலில் பின்னடைவை சந்திக்காத இயக்கமோ , தலைவர்களோ உலகில் இல்லை. வாழ்நாள் முழுவதும் தீய சக்திகளால் அசைத்துக் கூடப் பார்க்க முடியாத நம்முடைய புரட்சித்தலைவர் 1980 தேர்தலில் பின்னடைவை சந்தித்த போது உடனிருந்த சிலர் சுய நலத்திற்காக ஓடிப்போனார்கள். 1996_இல் அம்மா அவர்கள் பின்னடைவை சந்தித்த போது சுயநலத்தோடு இருந்த சிலர் பறவைபோல் பறந்து போனார்கள். ஆனால் எம்ஜிஆரும் , அம்மாவும் தொண்டர்கள் பலத்தோடு மீண்டும் விசுவரூபம் எடுத்து வரலாற்றை பதிவு செய்தனர். சுயநலமிக்க தனி நபர்களை நம்பி இந்த இயக்கம் இருந்து இல்லை.

தீய சக்திகளுக்கு எதிராக ரத்தம் உடலில் ஓடுகின்ற நெஞ்சுரம் கொண்ட தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கத்தை அற்ப ஆசைக்காக தாவி ஓடுகிற சிலரின் துரோகத்தால் எதுவும் செய்துவிடமுடியாது. இன்னும் சொல்லப் போனால் அதன் பிறகுதான் இயக்கம் மேன்மை தூய்மை அடையும்

”அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்…..

அது ஆணவச் சிரிப்பு.!

நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது…..

சிரிப்பவர்கள் யார் ?அழுவது யார் ?தெரியும் அப்போது….

நான் ஒரு கை பார்க்கிறேன்……

நேரம் வரும் கேட்கிறேன்…….

பூனை அல்ல புலி என்று

போகப் போகக் காட்டுகிறேன்..”” என்ற புரட்சித்தலைவரின் பாடல் வரிகளை நெஞ்சில் அசைபோட்டபடி அம்மாவின் உண்மை தொண்டர்கள் புதிய உத்வேகத்தோடு களத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஏகாதிபத்திய சக்திகள் அளிக்கின்ற பொம்மை அதிகாரம் போன பிறகு துரோகிகளை அண்டி நிற்பதற்கு அவர்களின் நிழல் கூட தயங்கும். அந்த நிலை வரும் நாள் வெகு தொலைவில் இல்லை. அப்படி நடக்கும்போது சத்தியத்தை உலகிற்கு நிரூபித்து தர்மத்தின் பிள்ளைகளாக ஒளிர போகின்றோம் என்று தெரிவித்திருந்தார்.

Categories

Tech |