பெரியார் குறித்து பேசியதற்கு ரஜினிகாந்த் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று பாஜகவின் தேசிய செயலாளர் H.ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோயிலான காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தரிசனம் செய்ய வந்தார். அங்கு வந்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலைகள் பொன்னாடைகள் அணிவிக்கபட்டு கௌரவிக்கப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கர்நாடகா உத்திரபிரதேசம் மாநிலங்களைப் போல ஒரு சில அமைப்புகளை தமிழகத்திலும் தடை செய்ய வேண்டிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது. நெல்லை கண்ணனுக்கு டெல்லியில் உள்ள ஒருவருடன் எப்படி தொடர்பு ஏற்பட்டது என்பது குறித்து காவல்துறையினர் விரிவான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் ரஜினி குறித்து திராவிடர் கழகத்தினர் அவதூறு பரப்பி வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில் கி.வீரமணி, சுபவீரபாண்டியன் உள்ளிட்டோர் இந்து மதத்திற்கு எதிராக தொடர்ந்து பேசி வருகின்றனர். பெரியாரும் இந்து மதத்திற்கு எதிராக பல விஷயங்களில் ஈடுபட்டுள்ளார்.
அதில் ஒன்றை மட்டுமே ரஜினிகாந்த் அவர்கள் குறிப்பிட்டு கூறியிருக்கிறார். இது எந்த விதத்திலும் பெரியாரை இழிவு படுத்திய செயலாக இருக்காது அவர் உண்மையை மட்டுமே கூறியிருக்கிறார். ஆக ரஜினிகாந்த் அவர்கள் கவலைப்படத் தேவையே இல்லை. அவர் மீது எந்தவித சட்டப்படியான நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.