சுங்கச்சாவடிகளில் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளை கடந்து செல்வதற்கு பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. தமிழகத்தில் உள்ள சுங்க சாவடிகளில் முக்கியமான சுங்க சாவடி ஆக உள்ள உளுந்தூர்பேட்டை சுங்கசாவடியில் 12 மணிமுதல் பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் கட்டாயமாக்கப்பட்டது. சுங்கச்சாவடிகளில் அனைத்து தளங்களிலும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டனர்.
பணம் கட்டி சுங்கச்சாவடியை கடந்து செல்வதற்கான வரிசை தனியாக இருந்தது. ஸ்டிக்கர் இல்லாமல் வரும் வாகனங்களுக்கு வழக்கமாக வசூலிக்கும் கட்டணத்தை விட இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சுங்க சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வாகன ஓட்டிகளை பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் வாங்கி வாகனத்தில் ஒட்டும்படி அறிவுரை செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.