தனியார் நிறுவனங்களில் அதிக நேரம் பணிபுரிந்தால் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக 3ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 50 வது நாளாக அமலில் உள்ளது. இதை நிலையில், மத்திய அரசு வழிகாட்டுதல் படி அனைத்து மாநிலங்களிலும் சில ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, புதுச்சேரியில் வழக்கம்போல் மளிகை, காய்கறி, இறைச்சி, மீன்கடை, பேக்கரி, ஓட்டல்கள், எலக்ட்ரிக்கல், டூவீலர் மெக்கானிக், செல்போன் கடைகள் என சுமார் 70 சதவீதம் கடைகள் திறக்கப்பட்டன. மேலும் சில தொழில் நிறுவனங்களும் திறக்கப்பட்டன.
சமூக இடைவெளியை முறையாக பின்பற்றவேண்டும், அனைவரும் முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதனடிப்படையில், புதுச்சேரியில் 70% பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், 40 நாட்களுக்கு பிறகு தனியார் நிறுவனங்கள் திறக்கப்பட்டதால், ஊழியர்களின் பணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் தனியார் தொழில் நிறுவனங்கள் அதிக நேரம் பணிபுரிந்தால் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இதனிடையே, புதுச்சேரியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி அரும்பார்த்தபுரத்தைச் சேர்ந்த 36 வயது தனியார் நிறுவன தொழிலாளிக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.