வரதட்சணையாக இரண்டு நாட்கள் இலவச மருத்துவ முகாமை கேட்டு அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார் பயிற்சி ஆட்சியர்
நெல்லை மாவட்டத்தின் பயிற்சி ஆட்சியராக இருப்பவர் சிவகுரு பிரபாகரன். தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்த இவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்து பெண் பார்க்கும் பணி தீவிரமாக நடந்து வந்த நிலையில் இவர் திருமணத்திற்கு விதித்த நிபந்தனை அனைவரையும் சிந்திக்க வைத்தது. தான் பிறந்த மற்றும் அதனை சுற்றியுள்ள வட்டார பகுதிகளுக்கு வாரத்தில் இரண்டு நாட்களாவது இலவச மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்பதே அவர் விடுத்த கோரிக்கை.
அவரது கோரிக்கையை ஏற்ற சென்னை நந்தனம் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியரின் மகள் வாரத்திற்கு இரண்டு நாட்கள் கிராம மக்களுக்கு சேவை செய்ய தயார் என வாக்குறுதி கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து சிவகுருவுக்கு மருத்துவர் கிருஷ்ண பாரதிக்கும் கடந்த 26ஆம் தேதி அனைவரது ஆசியுடன் திருமணம் நடைபெற்று முடிந்தது. வரதட்சணை எனும் பெயரில் பலர் கொடுமைப்படுத்தும் காலத்தில் வித்தியாசமான வரதட்சணையை கேட்டிருக்கும் சிவகுருவை அப்பகுதி மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.