வரதட்சணை கேட்டு தனது ஆபாச படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டதால் பெண் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த விஜயபாரதி என்பவர் திருமணம் முடிந்து தன் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அயனாவரத்தை சேர்ந்த திவ்யா என்ற பெண்ணுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் விஜயபாரதி காதலித்து திருமணம் செய்து கொண்ட திவ்யாவிடம் 10 இலட்சம் வரதட்சணை வேண்டும் என கேட்டு கொடுமை செய்யத் தொடங்கியுள்ளார். அதோடு கேட்ட வரதட்சணையை கொடுக்காவிட்டால் ஆபாச படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டலும் விடுத்துள்ளார்.
இதனால் கோபம் கொண்ட திவ்யா கடந்த ஜூலை மாதம் தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அதோடு அயனாவரத்தில் இருக்கும் மகளிர் காவல் நிலையத்தில் விஜயபாரதி மீது புகார் அளித்தார். இதனால் திவ்யா-விஜயபாரதி இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் விஜயபாரதி திவ்யாவின் ஆபாச புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக மனமுடைந்த திவ்யா அதிக அளவில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இச்சம்பவம் காவல்துறையினருக்கு தெரியவர அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.