தண்ணீர் என நினைத்து ஆசிட்டை குடித்த பாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் அய்யம்பாக்கம் பகுதியில் செல்வம் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மேலும் இவருடன் செல்வத்தின் தாயான மேனகாவும் வசித்து வந்துள்ளார். மேனகாவுக்கு சர்க்கரை நோய் மற்றும் கண் பார்வை குறைபாடு இருந்துள்ளது. இதனால் அவர் மருந்து எடுத்துக் கொள்வது வழக்கமான ஒன்று.
இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று மேனகா உணவு உண்ட பின்பு மாத்திரையை வாயில் போட்டு விட்டு தண்ணீர் என நினைத்து ஆசிடை எடுத்து குடித்துள்ளார். அதன்பின் சிறிது நேரத்திலேயே அவர் வயிற்றுவலி மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் அலறித் துடித்துள்ளார். அந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அதன்பின் அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக கே.எம்.சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் அளிக்காத காரணத்தினால் அவர் பரிதாபமாக இறந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.