காஞ்சிபுரத்தில் ‘ஹான்ஸ்’ புகையிலையை சுடு தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது..
கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் இருப்பதால் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக மது கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால், மதுப்பிரியர்கள் பலரும் கடும் வேதனையில் இருந்து வருகின்றனர். ஒரு சிலர் தற்கொலை செய்து வந்த செய்தியை நாம் பார்த்திருக்கிறோம்.
சமீபத்தில் கூட போதை ஏற்றுவதற்காக சானிடைசர் குடித்த சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததை நாம் கேள்விப்பட்டிருப்போம்.. அதேநேரம் புதுக்கோட்டையில் போதைக்காக குளிர் பானத்தில் ஷேவிங் லோசனை கலந்து குடித்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்..
இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த துப்புரவு பணியாளர் செல்வகணபதி என்பவர் திருட்டு தனமாக போதைக்காக சுடு தண்ணீரில் ‘ஹான்ஸ்’ புகையிலையை போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்துள்ளார். இதையடுத்து சிறிது நேரத்தில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.. அதைத்தொடர்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்ட துப்புரவு பணியாளருக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.