Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“காரை வச்சிக்கிட்டு 1 லட்சம் தாங்க” காவல்துறையினரிடம் தகராறு செய்த வாலிபர்… சென்னையில் பரபரப்பு…!!

காவல்துறையினர் மீது காரில் மோதுவது போல் சென்றதோடு, 1 லட்ச ரூபாய் கேட்டு வாலிபர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள போரூர், பூந்தமல்லி போன்ற பகுதிகளில் ஊரடங்கு காரணமாக காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போரூர் நான்கு சாலை சந்திப்பில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, அவ்வழியாக வேகமாக சென்ற காரை நிறுத்தும்படி கூறியுள்ளனர். ஆனால் காரை ஓட்டிச் சென்ற வாலிபர் காவல்துறையினர் மீது மோதுவது போல சென்று காரை நிறுத்தாமல் வேகமாக போனதால் இதுகுறித்து உடனடியாக போரூரில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வேகமாக சென்ற அந்த காரை போரூரில் நின்ற காவல்துறையினர் மடக்கிப் பிடித்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போதுதான் அந்த வாலிபர் மது குடித்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த வாலிபர் தனது பெயர் மைக்கேல் என்றும், குடும்ப தகராறு காரணமாக இவ்வாறு காரில் வேகமாக சென்றதாகவும் காவல்துறையினரிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அந்த வாலிபர் தன் மீது வழக்கு போட்டு காரை பறிமுதல் செய்து கொள்ளுங்கள் என்றும், அவசரமாக தனக்கு ஒரு லட்சம் தேவைப்படுவதால் அதனை தாருங்கள் என கூறி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் காவல்துறையினர் அந்த காரை பறிமுதல் செய்து மதுபோதையில் இருந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |