ஈரோட்டில் சொந்த பாட்டியின் தலையில் பேரனே டிவியை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை அடுத்த விவேகானந்த நகரில் வசித்து வருபவர் ஜோகரம்மாள். இவரது மகன் சாதிக் பாஷா பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். சாதிக் பாட்ஷாவின் மகன் பீர்முகமது சரக்கு ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சாதிக் பாட்சாவின் மனைவி இறந்துவிட மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இதையடுத்து பீர்முகமதுக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதால் அடிக்கடி வீட்டிற்கு மது அருந்திவிட்டு வந்து தனது பாட்டியுடன் தகராறு செய்வது வழக்கம். அந்த வகையில் நேற்று அதிகாலை வீட்டிற்கு வந்த பீர்முகமது போதையில் தூங்கிக் கொண்டிருந்த தனது பாட்டியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே தகராறு முற்றவே கோபமடைந்த பீர்முகமது அருகில் இருந்த டிவியை எடுத்து பாட்டியின் தலையில் போட்டுள்ளார்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பாட்டி ரத்த வெள்ளத்தில் மிதந்து பின் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பேரன் பீர்முகமதுவை கைது செய்து, பின் இறந்த பாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடிபோதையில் பாட்டியின் தலையில் டிவியை போட்டு பேரனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.