ஜூலை பத்தாம் தேதி முதல் குடிநீர் சேவையை வழங்கி வந்த தண்ணீர் லாரிகள் இயங்காது என லாரி களுக்கான ஒப்பந்ததாரர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் ஒருபுறம் கொரோனா பாதிப்பு ஏறிக்கொண்டே செல்கிறது. அதேசமயம் மறுபுறம் பெட்ரோல் டீசல் விலையும் உயர்ந்துகொண்டே செல்கிறது. காலை நேரத்தில் பெட்ரோல் விலை உயர்வு, மாலை நேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்வு என இரண்டு அறிவிப்புகளும் மக்கள் மத்தியில் தொடர்ந்து ஒரு விரக்தியை ஏற்படுத்தி வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் லாரிகள், சரக்கு ஆட்டோக்கள் மூலம் எடுத்துச் செல்லப்படும் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் அதிக அளவில் மக்களுக்கு குடிநீர் சேவையை வழங்க கூடியவைகளாக தண்ணீர் டேங்கர் லாரிகள் விளங்குகின்றன. இந்நிலையில் தண்ணீர் டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்ததாரர்கள் சங்கம் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.
அதில், பெட்ரோல் டீசலின் விலை நாள்தோறும் உயர்ந்துகொண்டே செல்வதாலும், லாரி ஓட்டுனர்கள் அதிகப்படியான சம்பளம் கேட்பதாலும் 30 சதவிகித ஊக்க தொகையை அரசு தங்களுக்கு வழங்க வேண்டும் எனவும், தர மறுத்தால் வருகின்ற ஜூலை பத்தாம் தேதி முதல் தண்ணீர் லாரிகள் இயங்காது என குடிநீர் வாரிய டேங்கர் லாரி ஒப்பந்ததாரர்கள் தெரிவித்துள்ளனர்.