குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யவில்லை எனில் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ஜோதம்பட்டி, கள்ளிப்பட்டி, கொல்லப்பட்டி போன்ற பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கவுண்டன் பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாயில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த உடைப்பை இன்று வரை சரி செய்யாததால் சாலையில் குடிநீர் வீணாக பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் அப்பகுதியில் தண்ணீர் தேங்கி கிடப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து வீணாக தண்ணீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதோடு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் போராட்டம் நடத்தப்படும் எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.