பணிச்சுமை காரணமாக பூச்சி மருந்தை குடித்து டிரைவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கசத்திரம் கிராமத்தில் குருவய்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருத்தணி பஸ் டிப்போவில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 7-ஆம் தேதி குருவய்யா வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அதன் மறுநாளும் டிரைவர் பற்றாக்குறையால் குருவய்யா பேருந்தை இயக்கியுள்ளார். அதன்பின் வேலை முடிந்து வீட்டிற்கு செல்ல முயன்ற குருவய்யாவை அதிகாரி சிறப்புப் பேருந்து இயக்க வேண்டும் என்று கூறி கட்டாயப்படுத்தியுள்ளார். அதற்கு குருவய்யா அதிகாரியிடம் தொடர்ந்து இடைவிடாமல் வேலை செய்ததால் உடம்பு ஒத்துழைக்கவில்லை.
இதனால் என்னால் சிறப்பு பேருந்து இயக்க முடியாது என அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். அதன்பின்பும் தொடர்ந்து அதிகாரி குருவய்யாவை கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த குருவய்யா பூச்சி மருந்து குடித்து விட்டு டிப்போ முன்பு மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த சக ஊழியர்கள் குருவய்யாவை உடனடியாக மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு குருவாய்யாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வறிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.