பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இருசக்கர வாகன கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி, தாலுகா, அரசு மருத்துவமனை போன்ற போலீஸ் நிலைய எல்லைகளில் கடந்த சில மாதங்களாக பெரும்பாலான இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரே நபர் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடி சென்றது கேமராக்களில் பதிவாகி இருந்தது. இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் குற்றப்பிரிவு காவல்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில் கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக டிரைவர் உடையில் மொபட்டில் வந்த ஒருவரை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தேர்முட்டி பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான காக்கிச்சட்டை என்கிற முருகேசன் என்பதும், அவர் தற்போது ஈரோடு சாஸ்திரி நகர் பாப்பாங்காட்டில் வசித்து வருவதும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. மேலும் முருகேசன் ஓட்டி வந்த மொபட் திருடப்பட்ட வாகனம் என்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் முருகேசனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான நபரின் உருவம் முருகேசன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. அப்போது முருகேசன் ஈரோட்டில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடி கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதியில் விற்பனை செய்ததை காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டார். அதன்பின் முருகேசனை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் முருகேசன் கொடுத்த தகவலின்படி 25 இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் மீட்டனர்.