நாடு முழுவதும் சர்வதேச ஓட்டுநர் உரிமம் அளிப்பதில் குடிமக்களுக்கு சிறந்த வசதிகளை ஏற்படுத்துவதற்கான அறிவிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் 26, ஆகஸ்ட் 2022 அன்று அறிவிக்கை வெளியிட்டது. தற்போது, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அளிக்கப்படும் சர்வதேச ஓட்டுநர் உரிமங்களின் வடிவம், அளவு, முறை, வண்ணம் ஆகியவற்றில் வேறுபாடுகள் இருந்து வருகிறது. இதன் காரணமாக, வெளிநாடுகளில் இந்த சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்தும் குடிமக்கள், சிரமங்களை சந்தித்து வந்தனர். இந்தநிலையில், இந்த திருத்தத்தின் காரணமாக, ஜெனிவா ஒப்பந்தத்தின்படி, நாடு முழுவதும் ஒரே மாதிரியான சர்வதேச ஓட்டுநர் உரிமம் அளிக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனங்கள் உரிய ஆர்.சி புத்தகம், ஓட்டுநர் உரிமம், சர்வதேச ஓட்டுனர் அனுமதி ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், உரிய காப்பீட்டு பாலிசி, மாசு கட்டுப்பாடு சான்றிதழ் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். ஆவணங்கள் வேறு மொழியில் இருந்தால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்க வேண்டும். வெளிநாட்டு பதிவு வாகனங்களில் பயணிகளை ஏற்றி செல்ல, சரக்குகளை ஏற்றிச்செல்ல அனுமதி கிடையாது என கூறியுள்ளது.